மரவள்ளியின் உபயோகம்:
மரவள்ளி பயிரிடப்படும் இடங்களில் வாழும் மக்கள் மரவள்ளியைப் பயன்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களைச் சமைத்து உண்கின்றனர். இவற்றுட் சில உணவு வகைகள் பிரதேச, தேசிய, இன முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. மரவள்ளியைச் சமைக்கும் போது அதிலிருந்து நச்சுப் பொருள் நீக்கி முறையாகச் சமைக்க வேண்டும். அத்துடன், மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது.
தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன்படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு. இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.